Jul 20, 2015

10.5 லட்சம் லேப்டாப் ரெடி 6 மாதங்களில் வினியோகம்



அடுத்த 6 மாதங்களுக்குள் 10.5 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில்  பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கும் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய லேப்டாப் கொள்முதல் பிரச்னைகள் காரணமாக வழங்கப்பட வில்லை.
இதனால் இந்த ஆண்டாவது கிடைக்குமா என்று மாணவர்கள்  ஏங்கினர். இந்நிலையில் அடுத்த 6 மாதங்களுக்குள் மொத்தம் 10.5 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. லேப்டாப் கொள்முதல் செய்வதில், நீடித்த இழுபறியே தாமத வினியோகத்துக்கு முக்கிய காரணம் என்று எல்காட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, தகவல் தொழில்நுட்ப துறை வட்டாரங்கள் கூறியதாவது: லேப் - டாப் கொள்முதலுக்காக, 3 நிறுவனங்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனினும் விலையை குறைக்க பேச்சு நடத்தப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. தற்போது, விலையை குறைக்க, அந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுவிட்டன.

சென்னை, திருச்சி மாவட்டங்களில், கடந்த ஆண்டு பயின்ற, 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஏற்கனவே, லேப்டாப் கொடுக்கப்பட்டு விட்டது. மீதி, 5 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் தர வேண்டும்.

இந்த ஆண்டுக்கு, 5.5 லட்சம் மாணவர்களுக்கு தர வேண்டும்.எனவே மொத்தம் 10.5 லட்சம் லேப்டாப்கள், கொள்முதல் செய்ய, ஆர்டர் தரப்பட்டு உள்ளது. இதில், லெனோவா(5.5 லட்சம்) எச்.பி(1.6 லட்சம்) மற்றும் ஏசர்(1.6 லட்சம்)லேப்டாப்கள் அடக்கம். தற்போது, 2 லட்சம், லெனோவா லேப்டாப்கள் வந்து விட்டன. அவற்றை சோதித்த பின், அடுத்த வாரத்தில், பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

முதலில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அனுப்பப்படும். பின்னர் படிப்படியாக 5 மாதங்களுக்குள், 10.5 லட்சம் லேப் - டாப்கள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.