Jul 13, 2015

காணாமல் போன ஓவியம்/தையல் பாடத்திட்டம் விருதுநகரில் கண்டுபிடிப்பு : ஆசிரியர்கள் மகிழ்ச்சி


கிணத்த காணோம் என்ற வடிவேலு ஜோக் போல, கடந்த ஒரு ஆண்டாக தேடப்பட்டு வந்த பள்ளிகளுக்கான ஓவியம் மற்றும் தையல் பாடத்திட்டம் ஒருவழியாக விருதுநகரில் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், தையல், இசை, கைவினை, தோட்டக்கலை என பல கலைப்பிரிவுகளில் பாடம் நடத்த உத்தரவிட்ட அரசு, அதற்கான பாடத்திட்டத்தை கடந்த ஆண்டு உருவாக்கி வெளியிட்டது. இதற்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர கலை ஆசிரியர்கள் மற்றும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு பாடப்பிரிவு பிரித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.  ஆனால் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு முன்பாகவே இந்த பாடத்திட்டம் மாயமாய் மறைந்தது.  இதற்காக  பல முறை கல்வித்துறை அலுவலகங்களுக்கு அலைந்த ஆசிரியர்கள் பெயரளவில் பாடம் நடத்தி வந்தனர். இப்போது காணாமல் போன பாடத்திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அப்பாடா... என்று பெருமூச்சு விட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்த பாடத்திட்டத்தின் நகலை பெற்று சென்றுள்ளனர். இதையாவது பத்திரமாக வைத்து ஜெராக்ஸ் போட்டு சீக்கிரம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பினால் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர வசதியாக இருக்கும் என்பது ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு.