Jul 13, 2015

கதறும் ஆசிரியர்கள்/களைத்து போகும் மாணவர்கள் தேவையா இந்த கட்டாய சிறப்பு வகுப்பு?

அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய சிறப்பு வகுப்பு கல்வியாண்டு தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கத்தை விட 4 மணிநேர கூடுதல் பணிசுமை காரணமாக ஆசிரியர்கள் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். மேலும் மாணவர்களும் களைப்படைந்து வருவதால் இந்த சிறப்பு வகுப்புகளின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக 10 மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என அரசு பள்ளிநிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக  கல்வியாண்டு தொடக்கம் முதலே இந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படுகிறது. வழக்கமாக காலாண்டு அல்லது அரையாண்டு சமயத்தில் தொடங்கும் இந்த சிறப்பு வகுப்பு இந்த ஆண்டு இப்போதே தொடங்கி விட்டதால்,  ஆசிரியர்களின் பணிச்சுமை கடுமையாக அதிகரித்துள்ளது.

மற்ற வகுப்பு ஆசிரியர்கள் காலை 8 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கு சென்றுவிடும் நிலையில் 10 மற்றும் பிளஸ்2 ஆசிரியர்கள் காலை 8 முதல் இரவு 8 வரையும் கூடுதலாக விடுமுறை தினங்களான சனிக்கிழமைகளிலும் பணிசெய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். இதனால் ஆசிரியர்களிடையே கடும் அ திருப்தி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்த பின், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க சிறப்பு வகுப்புகளை ஆசிரியர்களே விரும்பி நடத்திய காலம்போய், அரசு கட்டாயமாக கல்வியாண்டு தொடக்கத்திலேயே நடத்துகிறது. இதனால் அதிகப்படியான பணிசுமை ஏற்பட்டுள்ளதால், பல ஆசிரியர்கள் கடமைக்கு பாடம் நடத்தும் நிலைமைக்கு உள்ளாகி உள்ளனர். மேலும்  கீழ் வகுப்புகளுக்கு சென்றுவிடலாமா என்று பல ஆசிரியர்கள் யோசித்து வருகின்றனர். அதிகப்படியான  வகுப்பு நேரத்தால் மாணவர்களும் களைத்து போகின்றனர்.

கட்டாய சிறப்பு வகுப்புகளுக்கு பதிலாக பள்ளி நேரத்தில் பாடம் முழுமையாக நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.அலுவல் நேரத்தில் நலத்திட்டம் வழங்கல், புள்ளிவிபரம் சேகரிப்பு என கூடுதல் பணிகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தினமும் சிறப்பு வகுப்பு என்பது பெற்றோரையும் பொதுமக்களையும் ஏமாற்றும் செயலாகவே உள்ளது என்றனர்.