Jul 13, 2015

அதிகப்படியான உபரி ஆசிரியர்கள் கானல் நீராகும் புது ஆசிரியர் நியமனம்!


தமிழக அரசுப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால்  நடப்பாண்டில் புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பிருக்காது என்று தெரியவந்துள்ளது. இதனால் வழக்கம்போல இந்த ஆண்டும் காலிபணியிடங்களுக்கு  தகுதித்தேர்வு நடத்தி பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ஆசிரியர் பட்டதாரிகளுக்கு ஏமாற்றமாகி உள்ளது.

தமிழகத்தில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.  இவற்றில் கடந்த கல்வியாண்டில் 3500 இடைநிலை மற்றும் 7000 பட்டதாரி /முதுகலை ஆசிரியர்கள் என 10500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த மே 31ம் தேதி, தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் பள்ளிகளில் பணிநிரவல் நடத்த ஐந்தாம் வகுப்பு வரை 1:30 என்ற விகிதத்திலும், 6 முதல் 8 வகுப்பு வரை 1:35 என்ற விகிதத்திலும் கடந்த கல்வியாண்டு மாணவர் சேர்க்கை அடிப்படையிலும் கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.இதனால் விரைவில் புதிய ஆசிரியர் பணிநியமனம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வு பெற்ற எண்ணிக்கையை விட உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு புதிய ஆசிரியர் நியமனம் இருக்காது என்று கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது : இந்த ஆண்டு உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பணிநிரவல் நடத்தினால் அனைத்து தகுதியான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பினாலும் கூட, உபரி ஆசிரியர் பணியிடம் நீடிக்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இதனால் உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல் ஆசிரியர் நியமனம் நடந்தது.

உதாரணமாக ஒரு பள்ளியில் 5 ஆசிரியர்களே போதுமானதாக இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 8 பேர் வீதம் பணியமர்த்தப்பட்டனர். அந்த 3 உபரி ஆசிரியர்களை முறையாக நீக்கியிருந்தால் கடந்த முறை நியமனம் மிக சொற்பமாகவே நடந்திருக்கும். தற்போது பணிநிரவல் நடத்தப்பட்டால் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை குறையுமே தவிர முற்றிலுமாக நீக்கிவிடாது. குறிப்பாக, பல ஆசிரியர்களுக்கு வேறு ஊர்களுக்கு டிரான்ஸ்பர் ஏற்படலாம். மேலும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிகமும் குறைந்துவருவதால் உபரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டில் புதிய ஆசிரியர் நியமனம் என்பது சாத்தியமில்லை என்பதால்தான் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.