Jul 21, 2015

kalviseithi | இன்ஜினியரிங் படிச்சிருக்கீங்களா, இனி நீங்களும் பிஎட் படிக்கலாம்


இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இந்த ஆண்டு முதல் பிஎட் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஆசிரியராகும் சிறந்த வாய்ப்பு உருவாகி உள்ளது.
தேசிய ஆசிரியர் கவுன்சிலின் உத்தரவுப்படி, பிஎட் படிப்பில் பல மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் பிஎட் படிப்பு இரண்டு ஆண்டாக(முன்பு ஒராண்டு) உயர்த்தப்பட்டுள்ளது. அதேப்போல பல புதுப்பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவர்களும் பிஎட் படிப்பில் சேரலாம் என்று புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அரசாணையை தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர  அபூர்வா வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாக தெரியவந்துள்ளதாவது : பிஇ அல்லது பிடெக் படித்த இன்ஜினியரிங் பட்டதாரிகளும் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். இயற்பியல், வேதியியல், மற்றும் கணிதம் போன்ற பாடப்பிரிவுகளின் கீழ் பிஎட் படிப்பில் சேரலாம். குறைந்தபட்ச கல்வித்தகுதி, இடஒதக்கீடு பிரிவு வாரியாக மதிப்பெண் தகுதி, உள்ளிட்ட அனைத்து தகுதிகளும் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடருகிறது. கடந்த ஆண்டை போல பிஎட் மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தாமல், சென்னை லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.

ஆண்டுதோறும் பெரும்பாலான மாணவர்கள் பிஇ மற்றும் பிடெக் ஆகிய பாடங்களை தங்கள் விருப்பமான பாடமாக தேர்ந்தெடுத்து படித்து வருவதால், அதிகம் போட்டி நிறைந்த களமாக இன்ஜினியரிங் மாறிவிட்டது. இதனால் போதிய வேலைவாய்ப்பு கிடைப்பது குதிரைகொம்பாகிவிட்டது. இந்த குறையை போக்கும் வகையில், தற்போது பிஎட் படிப்பு அவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.