Aug 31, 2015

உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை: சட்டசபையில் நாளை தீர்வு கிடைக்குமா?



கல்வியாளர்கள் எதிர்பார்ப்பு:தமிழக சட்டசபையில், உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம், நாளை நடைபெற உள்ளது. அப்போது, உயர் கல்வித்துறை குளறுபடிகளை நீக்கும் அறிவிப்புகள் வர வாய்ப்பு உள்ளது என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்



பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில்,உயர் கல்வித்துறை கடிவாளமில்லாத குதிரை போல இயங்கி வருவதாக, தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. பணி நியமனங்கள், பாடத்திட்டம் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளில் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
சில நாட்கள் முன் நடந்த உதவிப் பேராசிரியர் நியமனத்தில், தேர்வு விதிகள் மீறப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்கு, உயர் கல்வித்துறை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அரசு கல்லுாரிகளில் பேராசியர்களும், மாணவர்களும் எப்போது கல்லுாரிக்கு வருகின்றனர், செல்கின்றனர் என்பதை சரியாகக் கண்காணிக்காத காரணத்தால், வகுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
 கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கு,  தகுதியானவர்களின் விண்ணப்பங்களை பெற்று, விதிப்படி நிர்ணயம் செய்யப்படவில்லை; பொறுப்பு என்ற பெயரில், தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து வருகின்றனர். நிர்வாகப் பணிகளில், அதிக அளவுக்கு பேராசிரியர்களை நியமித்துள்ளதால், கற்பித்தலுக்கு, கல்லுாரிகள் போதிய அளவில் இல்லை.
கவுரவப்பேராசிரியர்களுக்கான ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை.
  அண்ணா பல்கலை, பாரதியார் பல்கலை, சென்னை பல்கலை என முக்கியமான பல்கலைகளில் பலர், பேராசிரியர் பணியை விட துறைத்தலைவர், பதிவாளர் அலுவலக அதிகாரிகள், துறை இயக்குனர், கல்லுாரி முதல்வர் போன்ற பணிகளை கவனிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இப்படி, உயர் கல்வித்துறை மீது அடுக்கடுக்காக பல புகார்கள் கூறப்படுவதால், நாளை தாக்கல் செய்யப்படும் மானிய கோரிக்கையின் போது, இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகலாம் என, பேராசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment