Sep 30, 2015

பிச்சை எடுத்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு

பிச்சை எடுத்த ஒரு மாணவிக்கு, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 2 மகள்களுடன் தேனி பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தார்.


பின்னர் அந்த பெண்ணை பழனிசெட்டிபட்டியில் உள்ள அவருடைய உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அவருடைய மகள்களான கார்த்திகா, சர்மிளா ஆகிய 2 பேரும் தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
         
கார்த்திகா பத்தாம் வகுப்பு தேர்வில் 454 மதிப்பெண்கள் எடுத்தார். கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு எழுதிய இவர் 892 மதிப்பெண்கள் எடுத்தார்.

சென்னையை சேர்ந்த ஒரு கல்வி அமைப்பு ரஷ்யாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிக்க ஆண்டு தோறும் 200 மாணவிகளை தேர்வு செய்து அனுப்புகிறது. அவர்களில் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தை சேர்ந்த ஒரு மாணவியும் தேர்வு செய்யப்படுவார். அந்த மாணவி 50 சதவீத கல்விக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். அதன்படி இந்த ஆண்டு, அன்று பஸ் நிலையத்தில் பிச்சை எடுத்த சிறுமி ரஷ்ய மருத்துவக்கல்லூரியில் படிக்க தேர்வானார்.


இதன்படி அடுத்த மாதம் முதல் வாரத்தில் ரஷ்யா செல்ல இருந்தார். இதற்கிடையே அவசர அழைப்பு காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேனியில் இருந்து புறப்பட்ட கார்த்திகா நேற்று ரஷ்யா சென்றடைந்தார்.

1 comment:

  1. karunai ullangalukku nandri karthigavirkku vaalthukkal

    ReplyDelete