Sep 3, 2015

தேர்ச்சி விகித உயர்வு : பின்னணியில் சமச்சீர் கல்வியா சட்டசபையில் காரசார விவாதம்


தமிழகத்தில் மாணவர்களின் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சமச்சீர் கல்வி காரணமா என்பது குறித்த விவாதம் சட்டசபையில் நடந்தது.
பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர் திராவிட மணி (தி.மு.க.) பேசினார். அப்போது அவர், அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக ஒரு கருத்தை தெரிவித்தார். இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில் அளித்து கூறியதாவது:


தமிழகத்தில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக கூறுவதை ஏற்க முடியாது. சட்டசபைக்கு வெளியே அரசியல் கட்சி தலைவர்களும் அரசியல் ஆதாயத்திற்காக இதே தான் கூறி வருகிறார்கள். அவர்களுக்கும், உங்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன், ஏதாவது ஒரு பள்ளி மூடப்பட்டு இருக்கிறதா? எதையும் ஆதாரத்துடன் கூறுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு தான் வருகிறது. 1,500 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டதால் தான் இன்றைக்கு அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது.

அப்போது உறுப்பினர் திராவிடமணி,  தி.மு.க. கொண்டு வந்த சமச்சீர் கல்வியால் தான் தேர்ச்சி விகிதம் அதிகரித்து  இருக்கிறது என்று புது தகவலை கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.சி.வீரமணி இந்த தகவல் முற்றிலும் தவறானது. தமிழகத்தில் இன்றைக்கு தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கப்படுகிற விலையில்லா மடிக்கணினி, புவியியல் வரைப்படம், காலணிகள், சீருடைகள், கணித உபகரணங்கள், வண்ண பென்சில்கள், சிறப்பு ஊக்கத்தொகை, மிதிவண்டி, விலையில்லா பாடபுத்தகங்கள், இடை நிற்றலை தவிக்க கல்லூரிக்கு செல்லும் வகையில் ரூ.5 ஆயிரம் உதவி தொகை என்று இதுபோன்ற காரணங்களால் தான் மாணவர்கள் நல்ல தேர்ச்சியை பெற்று இருக்கிறார்கள் என்றார்.

 அடுத்து பேசிய அதிமுகவை சேர்ந்த வைகைசெல்வன், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆளுமை திறனால் தேசிய அளவிலான கல்வி வளர்ச்சி குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்று இருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment