Sep 9, 2015

கரண்ட் கனெக்ஷன் வாங்குறது இனி ஈஸி விரைவில் ஆன்லைனில் வசதி வருது

ஆன்லைன் மூலமாக அலைச்சல் இன்றி விரைவாகவும் சுலபமாகவும் புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைக்க 
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தமிழகத்தில், சாதி சான்றிதழ், பிறப்பு, இறப்பு, வருமானம் சான்றிதழ் மற்றும் கடை துவங்க அனுமதி போன்றவற்றை பெற, இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதனால் மக்கள் அலைச்சல் இன்றி, தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை, உரிய கட்டணம் மட்டும் செலுத்தி, சுலபமாக பெறுகின்றனர்.

ஆனால், புதிய மின் இணைப்பு பெற  தமிழ்நாடு மின் வாரியத்திடம், விண்ணப்பம் அளிக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, விண்ணப்பம் வழங்கிய, 30நாட்களுக்கு, புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், மின் வாரிய ஊழியர்கள் அலைக்கழிப்பதாகவும், லஞ்சம் வாங்கிய பின்னரே, மின் இணைப்பு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த ஊழலை ஒழிக்கவும், மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்தவும் புதிய மின் இணைப்பிற்கு,இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டத்தை செயல்படுத்த, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். தற்போது, இதற்கான மென்பொருள் தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. எனவே, விரைவில், இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்க உள்ளார்.

மின் வாரிய பிரிவுஅலுவலகத்தில், விண்ணப்ப வரிசை எண்களின் அடிப்படையில் தான், மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் ஊழியர்கள், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும், மின் இணைப்பு தருவதாக புகார் வந்தது. அதனால், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை, மின் நுகர் வோருக்கு, தீபாவளி பரிசாக, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி வைப்பார் என்று மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, தேதி, நேரம், வரிசை எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் பதிவாகும். 

இதில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். குறிப்பிட்ட தினங்களுக்குள், மின் இணைப்பு பெற முடியும். அப்படியே தாமதமானாலும், அதற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே மின் கட்டணத்தை இணைய தளம் மூலம் செலுத்தும் திட்டம், துவக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் மூலமாக மின் நுகர்வோர் பலர், கட்டண மையங்களுக்கு சென்று, கூட்ட நெரிசல் மற்றும் வரிசையில் நிற்கும் சிரமமின்றி வீட்டிலேயே கட்டணத்தை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment