Oct 8, 2015

தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்: ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா?

ஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் உரிய பேச்சுவார்த்தை மூலம் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,"ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் எந்தத் தரப்பினருக்கும் நிறைவோ நிம்மதியோஇல்லை; ஆட்சி என்ற ஒன்று முறையாக நடைபெறுகிறதா என்பதே அனைவருக்கும் சந்தேகமாக உள்ளது.வேறு வழியில்லாமல் சட்டமன்றக் கூட்டத் தொடரை நடத்தி முடித்து விட்ட போதிலும், அரசு இயங்குகிறதா என்றே தெரியவில்லை.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, நல்ல வேளையாக மத்திய அரசின் அமைச்சர், லாரி உரிமையாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய காரணத்தால், அந்தப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.தற்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள் தங்களுடைய பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
இது குறித்த செய்தி கடந்த பல நாட்களாக வந்த போதிலும், ஆசிரியர்களின் பல்வேறு சங்கப் பிரதி நிதிகளை முதலமைச்சரோ, அந்தத் துறை அமைச்சரோ அழைத்துப் பேச வில்லை. அதிகாரிகள் வேறு வழியில்லாமல், அதுவும் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) தான் ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுகிறார்கள். 

அந்தப் பேச்சுவார்த்தையும் உருப்படியான தீர்வு எதுவும் காணப்படாமல் தோல்வியிலே முடிந்துள்ளது.அமைச்சர் எங்கே போனார்? அவர் ஏன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா? ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கப் போவதாகச் செய்தி வந்து எத்தனை நாட்களாகிறது? உடனடியாக அந்தத் துறையின் அமைச்சர் முதலமைச்சரோடு கலந்து பேசி விட்டு, போராட்டம் அறிவித்த ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டாமா?கடந்த மார்ச் மாதமே கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் என 24 ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து "ஜேக்டோ" அமைப்பை மீண்டும் தொடங்கி, அதன் சார்பில் இது வரை மூன்று கட்டமாகப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.ஆனால் அரசுத் தரப்பில் "ஜேக்டோ" அமைப்பை அழைத்து யாருமே பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.


வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த பிறகாவது அமைச்சர் உடனடியாக முயற்சிகளைமேற்கொண்டு, போராட்ட அறிவிப்பு கொடுத்தவர்களை அழைத்துப் பேசி சமாதானப்படுத்துவதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும்.ஆனால் எல்லாவற்றையும் போல இந்தப் பிரச்சினையிலும் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளாத அ.தி.மு.க. அரசுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இப்போதாவது ஆசிரியர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, போராட்டத்தை முடித்து வைத்திடவும், அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும் முன் வரவேண்டுமென்று இந்த ஆட்சியினரை வலியுறுத்துகிறேன்" எனக் கூறியுள்ளார்.

1 comment:

  1. This is unnecessary & selfish strike. Many of the Graduates & Engineers have unemployment problem. Maximum Sch Grade teacher have't sufficient Knowledge. Just they stied +2, and D.T.Ed. Their salary above 30000. But they asked more salary. If Govt Take strong action and remove from job. Next month they earn only 3000( They are worth is 3000 Only) . This is only fact. Teacher's well know it.
    If Govt conduct TET for working teacher. Only 20% only pass the exam.

    ReplyDelete