Nov 3, 2015

டிச.28 முதல் 3 நாள், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு

 ஆசிரியர்களின் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 28 முதல் 30 வரை மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும். அதில் 2 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்றும் ஜேக்டோ அமைப்பு அறிவித்துள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (ஜேக்டோ) பொதுக்குழு கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழக ஆசிரியர்கூட்டணி மாநில பொதுச்செயலாளர் கோ. முருகேசன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்றபட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகப் பொதுச்செயலாளர் பெனின் தேவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் என்.ரெங்கராஜன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தலைவர் பெ.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அக்டோபர் 8-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்திய பின்பும், தமிழக அரசு, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வராத நிலையில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


அதன்படி, நவம்பர் 15-ம் தேதி மாவட்ட அளவில் இணைப்பு சங்க கூட்டமும், டிசம்பர் 5, 6-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவில் மறியல் போராட்ட ஆயத்த மாநாடும், டிசம்பர் 12, 13-ல் (சனி,ஞாயிறு) அனைத்து வட்டாரங்களிலும், மறியல் போராட்ட ஆயத்த மாநாடும், 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டிசம்பர் 28, 29, 30-ம் தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள்) அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் மறியல் போராட்டமும் நடத்தப்படும். இதில் 2 லட்சம் ஆசிரியர்கள் கலந்துகொள்வார்கள் என்று ஜேக்டோ உயர்நிலைக்குழு உறுப்பினரும்,தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசியர்கள் சங்க மாநிலத்தலைவருமான சாமி.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment