Dec 1, 2015

இயற்கை பேரிடரை விலங்குகளால் முன்கூட்டியே உணர முடியுமா?

விலங்குகள், பறவைகளால் கன மழை, பெரும் வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே உணர முடியுமா? அறிவியல் உலகில் 'முடியாது' என்பவர்களும் இருக்கிறார்கள். 'முடியும்' என்பவர்களும் இருக்கிறார்கள்.

       விலங்குகளுக்கு புலன்கள் கூர்மையானவை, மனிதர்களைவிட சில நிமிடங்கள் முன்கூட்டியே பேரிடர்களை உணர முடியும். அவற்றால் நன்கு நீந்தவும், ஒடவும் முடியும். இதனால்தான் அவை இயற்கை பேரிடர்களிலிருந்து தப்பிக்கின்றன' என்கிறார் அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழல் விஞ்ஞானியான விட் கிப்பன்ஸ். ஆனால், 'நேச்சர்' என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று ஆச்சரியமான தகவலை சொல்கிறது. அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதிகளில், பூகம்பம் நிகழ்வதற்கு முந்தைய சில நாட்களில், உள்ளூர் நாளிதழ்களில், வளர்ப்பு பிராணிகள் காணாமல் போவது பற்றிய விளம்பரங்கள் அதிகரிப்பதாக அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. சரி எந்தெந்த விலங்கினங்கள் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே உணர முடிவதாக சொல்லப்படுகிறது?


தேனீ
மழை பெய்வதற்கு சில மணி நேரங்கள் முன்பாகவே தேனீக்கள் தங்கள் மெழுகுக் கூடுகளுக்கு திரும்பிவிடுகின்றன. தேனீர்களால் காற்றிலுள்ள ஈரப்பதம், மேகங்களில் ஏற்படும் அயனி மின் மாற்றங்களை துல்லியமாக உணர முடிவதுதான் இதற்கு காரணம்.

எலி, பாம்பு
பூமிக்கடியில் வங்குகளில் வாழும் எலி, பாம்பு போன்றவை பூகம்பத்தை பல மணி நேரம் முன்பே உணர்ந்து, பாதுகாப்புக்கா வெளியேறி விடுகின்றன. பூமிக்கு மேலே வசிக்கும் மனிதர்கள் உணர்வதற்கு முன்பே, பூமிக்கு அடியில் வசிக்கும் இந்த விலங்கினங்களால் மெல்லிய அதிர்வுகள் வலுவடைவதற்கு முன்பே உணர முடிகிறது.

பூனை
ஜப்பானில் பூகம்பத்திற்கு முன்பு வீட்டில் வளர்க்கும் பூனை வினோதமாக சத்தமிட்டு, உருண்டு புரண்டு தன் அச்சத்தை தெரிவித்ததாக அதன் உரிமையாளர்கள் சொல்வதுண்டு. பூனைக்கு சிறு சப்தத்தையும், அதிர்வையும் உணரும் திறன் உண்டு.

நாய்
பல்லாயிரம் மனித உயிர்களை பறித்த 2004 சுனாமிக்குப் பிறகு, நாய்கள் போன்ற விலங்குகளின் சடலங்கள் மிகக் குறைவாகவே தென்பட்டதை நிவாரண பணியில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நாய்கள் தங்களை சுற்றிலும் நடக்கும் மாற்றங்களை கனிக்கக்கூடியவை. இரவு நேரம் சுனாமி வருகையில், குரைப்பதன் மூலம் பிற நாய்களுக்கும் தகவல் தெரிவித்து, பாதுகாப்பான பகுதிகளுக்கு அவை ஓடிச் சென்றிருக்கலாம்.

எறும்பு
மண்ணில் வாழும் எறும்புகளால் காற்று மண்டலத்திலுள்ள மின் மாற்றங்களையும், புவி காந்தப் புலத்தில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களையும் நுட்பமாக உணர முடியும். எனவேதான் பூகம்பம், மழை போன்றவை ஏற்படுவதற்கு முன்பே உணர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு சாரிசாரியாக வெளியேறுகின்றன. சில நாடுகளில் விவசாயிகள் எறும்புகளின் நடவடிக்கையை வைத்து மழையை கணிப்பது வழக்கம்.

மாடுஜப்பானில் பெரும் பூகம்பங்கள் ஏற்படுவதற்கு 6 நாட்களுக்கு முன்பிருந்தே கறவை மாடுகள் பால் சுரப்பது கணிசமாக குறைந்து விடுவதை விவசாயிகளும், பால் பண்ணையாளர்களும் கவனித்திருக்கிறார்கள். பேரிடர் வருவதை உணர்ந்து மிரண்டு போய்த்தான் அவை இப்படி நடந்துகொள்கின்றன என்கிறார்கள் அவர்கள்.

No comments:

Post a Comment